பாகிஸ்தானில் ஏற்படும் எந்த ஒரு ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆட்சியைக் கவிழ்க்காமல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் கைப்பற்றிய அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக ஷெபாஷ் ஷெரிப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே அரசியல் குழப்பங்கள் நிறைந்த பாகிஸ்தான் கடும் கடனிலும் பலத்த பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி யுள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் இராணுவத் தலைமை தளபதியாக இருக்கும் அசிம் முனீர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதை ஒரு தந்திரமாகவே வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர், பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்று கூறியதோடு, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள மத ரீதியான வேறுபாட்டை அடுத்த தலைமுறை இஸ்லாமியர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை இந்துவா ? எனக் கேட்டுப் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொல்வதற்கு அசிம் முனீரின் இந்தப் பேச்சு காரணமாக இருந்தது. தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. எனினும், பாகிஸ்தான் அரசு அசிம் முனீருக்கு பீல்டு மார்ஷல் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தது.
பாகிஸ்தான் வரலாற்றில் அயூப் கானுக்குப் பிறகு இரண்டாவது நபராகப் பணியில் இருக்கும்போது ஃபீல்ட் மார்ஷலாகப் பதவியேற்கும் ஒரே நபராகவும் அசிம் முனீர் பெருமை பெற்றார். அப்போதே, ஃபீல்ட் மார்ஷலை விட உயர்ந்த பதவியை அசிம் முனீருக்கு வழங்க எந்த வழியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பீல்டு மார்ஷல் ஆன உடனேயே பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் மற்றும் பாகிஸ்தான் தலிபான் ஆகிய அமைப்புகளை “ஃபிட்னா-அல்-இந்துஸ்தான்” என்று குறிப்பிட்டார். அதை உள்துறை அமைச்சகத்தின் மூலம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வைத்தார். 7ம் நூற்றாண்டு அரேபியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அர்த்தங்களைக் கொண்டுள்ள இஸ்லாமிய சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், உலகளாவிய இஸ்லாமிய ஒழுங்கின் பாதுகாவலராகப் பாகிஸ்தான் ராணுவத்தை மாற்றி வருகிறார் அசிம் முனீர்.
இதன் மூலம் பாகிஸ்தான் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு இந்தியா தான் காரணம் என்று சொந்த நாட்டு மக்களையும் நம்ப வைக்க முயற்சி மேற்கொள்கிறார். இது ஒன்றும் பாகிஸ்தானுக்கு புதிதல்ல. பிரிவினையின் போது நடந்த முஜாஹிதீன்களின் ஊடுருவல்கள் முதல் பஹல்காம் தாக்குதல் வரை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவமும், உளவு அமைப்பான ISI யும் உதவி வருகிறது. அசிம் முனீர் ஃபீல்ட் மார்ஷலான பிறகு பாகிஸ்தான் இராணுவத்துக்குள் ஜிஹாதி கொள்கை கொண்டு வரப் பட்டது. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் 27வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப் பட்டுள்ளது. இதனால் இராணுவத் தலைமை தளபதியான அசிம் முனீரே அரசியலமைப்பு மூலம் முப்படைகளின் தலைவராக மாறியுள்ளார். இதன் மூலம் வாழ்நாள் அதிபராகி உள்ளார் அசிம் முனீர். அசிம் முனீர் தலைமையில், பாகிஸ்தான் இராணுவம் அந்நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அல்லாமல் இஸ்லாத்துக்காக போராடும் ஜிஹாதியாக மாறியுள்ளது.
இந்தியாவுடன் நேரடி போரில் பாகிஸ்தான் தோற்று போகும் என்பது அசிம் முனீருக்குத் தெரியும். அதனாலேயே பாகிஸ்தான் இராணுவத்தை இஸ்லாமிய மதவெறிப் பிடித்த ராணுவமாக மாற்ற நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானை அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக்க ஜெனரல் ஜியாவுல் ஹக் கனவு கண்டதை ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் சாதிக்க முடியாததை அசிம் முனீர் செய்யத் துணிந்திருக்கிறார். ஏற்கனவே இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, சொந்த ராணுவத்தையே ஜிஹாதிகளாக மாற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கை இந்தியாவுக்கு இரட்டை தலைவலி என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
















