சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் தூர்வாரும் பணியின்போது அதிகளவில் மண் எடுத்ததால் மதில் சுவர்கள் வலுவிழந்து இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, கோயில் தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு 45 லட்ச ரூபாயும், பாத்திரக்குளத்தை தூர்வாருவதற்கு 15 லட்ச ரூபாயும் அரசு ஒதுக்கீடு செய்தது.
கடந்த மாதம் கோயில் குளங்களில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தெப்பக்குளத்தில் அதிகளவில் மண் எடுத்ததாலும், தொடர் மழை பெய்ததாலும், குளத்தைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் வலுவிழந்து இடிந்து விபத்துக்குள்ளானது.
மதில் சுவர்களின் பல இடங்களில் பிளவுகள் தோன்றி, பெரிய கற்கள் கீழே விழத் தொடங்கியதை கண்டு மக்கள் பதற்றமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், தெப்பக்குளத்தின் மதில் சுவர்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















