சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 115 பழங்குடியினர் மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பிய நிலையில் பாஜக பெண் எமஎல்ஏ அவர்களுக்குப் பாத பூஜை செய்து வரவேற்றார்.
சத்தீஸ்கரில் பழங்குடியினரின் மதமாற்றம் குறித்த விவாதங்கள் பரவலாக உள்ளன. பழங்குடியினர் பட்டியலில் இருந்து மதம் மாறியவர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிற மதங்களைத் தழுவிய பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய இந்து மதத்திற்குத் திரும்புவதற்கு கர்வாபசி எனப்படும் சடங்கு நடத்தப்படுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் 115 பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து தாய் மதமான இந்து மத்திற்கு திரும்பினர்.
இதையொட்டி கர்வாபசி எனப்படும் வீடு திரும்பும் சடங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில் பண்டாரியா சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ பாவனா போஹ்ரா கலந்து கொண்டு தாய் மதம் திரும்பிய பழங்குடியினருக்கு பாதபூஜை செய்து வரவேற்றார்.
இச்சடங்கு பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பெருமைக்கு மதிப்பளிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
















