கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் அரசின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இதற்கான அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். எனினும் இந்த அவகாசம் போதாது எனக் கூறி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்றச் சங்கத்தினர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் பள்ளிகள் முன்னேற்றச் சங்கத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் சரிவரச் செயல்படாததால் அனைத்து இடங்களையும் தனியார் பள்ளிகளே நிரப்பி விட்டதாகவும், எனவே குறுகிய கால அவகாசத்தில் தகுதியான மாணவர்கள் பட்டியலைத் தயாரிக்க இயலாது எனவும் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், மாணவர்கள் பட்டியலை அனுப்பாத பள்ளிகளுக்கான கால அவகாசத்தை, நவம்பர் 30ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
















