கயிலாயம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி சுமார் 13 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் என்பவர், கயிலாயத்திற்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பலரிடம் சுமார் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.
அவரை நம்பி மொத்தம் 38 பேர் G-Pay மூலம் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் சுற்றுலா ஏற்பாடு செய்யாமல், பணத்தையும் திருப்பித் தராமல் செல்போனை ஆஃப் செய்துவிட்டு சுவாதீஸ்வரன் தலைமறைவாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அம்பத்தூரை சேர்ந்த சுவாதீஸ்வரன் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த செல்வி ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், அனைவரையும் ஏமாற்றும் நோக்கிலேயே இருவரும் பணத்தை பெற்றது தெரியவந்தது. எனவே அவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
















