சிவகங்கை அருகே காவல் ஆய்வாளரின் வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிவந்த காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே அதிகரை விளக்கு பகுதியில் கடந்த 11ஆம் தேதி ராமநாதபுரம் சரக கூட்டு குற்ற நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஜெயராணி வந்த காவல் வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மதுரையைச் சேர்ந்த பிரசாத், அவரது மனைவி சத்யா, மற்றும் 3 வயது மகன் அஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சத்யாவின் சகோதரி சோமேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல் வாகனத்தை ஓட்டிவந்த காவலர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த காவல் வாகனத்தை ஓட்டிவந்த காவலர் பாலமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















