ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத், நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு, ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாகக் கருக்கா வினோத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஆளுநர் மாளிகை வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி ஆத்திரமடைந்த கருக்கா வினோத், சென்னை ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ் மீது காலணியை வீச முயன்றார்.
அப்போது அருகிலிருந்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இது போன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
















