கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை அளவிற்கு அதிகமாக தூர்வாரியதால், தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இடிந்து விழுந்த பக்கவாட்டுச் சுவரை பார்வையிட்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், குளத்தில் ஆழமாக மண் எடுப்பதாலும், தொடர் மழையாலும், மதில் சுவர்கள் வலுவிழந்து மண்சரிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் கோபகுமார், தெப்பக்குளத்தை தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒப்பந்ததாரருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தெப்பக்குளம் சேதமடைந்தது குறித்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.
















