மருத்துவ படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற ஷாஹீன் சயீத், டெல்லி தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கைதாகி வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார். ஜெய்ஷ்-இ- முகமது பயங்ரவாத அமைப்பின் பிடியில், இவர் சிக்கியது எப்படி? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
டெல்லி தீவிரவாத தாக்குதலில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதற்கு ஒரு நாள் முன்னதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் யாருமே எதிர்பாராத விதமாக 2 ஆயிரம் 900 கிலோ சக்திவாய்ந்த வெடிமருந்துகள் சிக்கியதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் இதன் பின்னணியில் இருந்ததால், அசம்பாவிதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த அதிகாரிகள், காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஸம்மில் ஷகிலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். உண்மை வெளிவருவதற்குள் டெல்லி தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழக்க, நாடு முழுவதும் அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு திட்டம் தீட்டப்பட்டதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முஸம்மில் ஷகில் தங்கியிருந்த 13-ம் எண் கொண்ட அறையில், மருத்துவர்கள் சதிவேலையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் இருந்து எவ்வாறு கெமிக்கலை கடத்துவது என்பது குறித்து இந்த அறையில் ஆலோசித்ததாக என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெண் மருத்துவரான ஷாஹீன் சயீத் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதும் அம்பலமாகி உள்ளது. பெண் மருத்துவரான ஷாஹீன் சயீத், மிரட்டலின் பேரில் பயங்கரவாத செயலுக்குத் துணை போயிருப்பாரோ என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், போகப் போக தான் தெரிந்தது… ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பெண் கமாண்டராக ஷாஹீன் சயீத் செயல்பட்டார் என்பது.
இப்படி ஷாஹீன் சயீத் பற்றி அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஷாஹீன் சயீத் மருத்துவ படிப்பில் தங்கம் பதக்கம் பெற்றவர் என்பதே அது. 1996-ம் ஆண்டில் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த அவர், பின்னர் எம்டி பட்டப்படிப்பையும் அங்கேயே மேற்கொண்டார்.
2006-ம் ஆண்டில் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியில் சேர்ந்த அவர், 2015-ம் ஆண்டில் தனது கணவரை விவகாரத்து செய்துள்ளார். அதன் பின்னர் தான், ஷாஹீன் சயீத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஃபரிதாபாத் கல்லூரியில் அப்போது மாணவராகப் பயின்று வந்த முஸம்மில் ஷகில் உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்ப்பு கிடைத்துள்ளது.
அதன்பின்னர், மருத்துவ முகாம் என்ற பெயரில் ஷாஹீன் சயீத், ஜம்மு-காஷ்மீருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஷாஹீன் சயீத்தின் சகோதரரும் மருத்துவருமான பர்வேஷ் அகமதுவுக்கும் சதிவேலையில் தொடர்பு இருக்குமோ என அதிகாரிகள் ஆராய தொடங்கியுள்ளனர். பெண் மருத்துவரான ஷாஹீன் சயீத், இந்தியாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவைத் தொடங்கி, ஆட்கள் சேர்க்கும் ஈடுபட்டிருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், அது குறித்த விசாரணையையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
















