மதுரை ஒத்தக்கடையில் முறையாகத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
மதுரை ஒத்தக்கடை ஊராட்சியில் முறையாகக் குப்பைகள் அகற்றப்படாமல் சாலைகளில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. குப்பைகளும், இறைச்சிக் கழிவுகளும் நீர்நிலைகளிலும், பாசன கால்வாயிலும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஒத்தக்கடை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொதுமயானத்தில் கொட்டி வைக்கப்படுகின்றன.
இதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பல மாதங்களாக மயான பகுதியில் குப்பைகள் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பெருகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுவட்டார மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அருகே ஒத்தக்கடை உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவதாகவும், கால்நடைகள் நெகிழி பைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒத்தக்கடையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட நிலையில், அதனைத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மதுரை மாநகரத்தின் துவக்கமாக அமைந்துள்ள ஒத்தக்கடை ஊராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, தங்கள் சிரமங்களை அரசு போக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
















