பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள், 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாஜக 89 இடங்களிலும், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி 19 தொகுதிகளிலும், மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சி 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேநேரம் INDI கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்ட போதும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 25 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது.
















