பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். வணிக வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேள தாளங்களுடன் சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர்.
இதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட பாஜகவினர் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேட்டியளித்த எம்எல்ஏ காந்தி, வாக்குத்திருட்டு என்ற பொய் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக கூறினார்.
இதேபோல் மதுரை உசிலம்பட்டியில் பாஜக மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் ராம்சேகர் தலைமையில் பாஜகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக மற்றும் அதிமுகவினர் பீகார் தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது பேட்டியளித்த அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பாரத் மாதாகி ஜெ எனவும் பிரதமர் மோடி வாழ்க எனவும் முழக்கமிட்டனர்.
புதுச்சேரியில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் பீகார் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நமசிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராஜசேகரன், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















