பீகார் மாநிலத்தில் மகாகத்பந்தன் கூட்டணி வரலாறு காணாத வகையில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்…
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்ற தேஜஸ்வி யாதவ், 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் லோக் ஜன்சக்தி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் குமார் சிங் 87 ஆயிரத்து 641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் 35 ஆயிரத்து 703 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதேபோல் RJD சார்பில் சப்ரா தொகுதியில் போட்டியிட்ட போஜ்பூரி நடிகரான கேசரி லால் யாதவ், பாஜக வேட்பாளர் சோட்டி குமாரியிடம் தோல்வியை தழுவினார். மொத்தமாக 79 ஆயிரத்து 245 வாக்குகள் பெற்ற கேசரி லால், 7 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் இளம் வேட்பாளரும், பிரபல நாட்டுப்புறப் பாடகியுமான மைதிலி தாகூர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட RJD வேட்பாளர் பினோத் மிஸ்ராவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 84 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்ற மைதிலி தாகூர், 11 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
















