கேரளாவில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவரை, குறித்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர், அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கண்ணில் இரும்பு கம்பி தாக்கியதில் படுகாயமடைந்தார். இதனையடுத்து சக பணியாளர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்த தகவலானது அவசர காலத்தில் உதவுவதற்காக தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உருவாக்கி உள்ள எமெர்ஜென்சி எஸ்கார்ட் என்ற குழுவில் பகிரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், கோவையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உதவியுடன் சென்றது.
இதனால் 185 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து, அந்த முதியவர் குறித்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில், எந்த பலனையும் எதிர்பாராமல், உதவி புரிந்த கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
















