நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் கடந்த 4ஆம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு நடைபெற்றது. பின்னர், வேதமந்திரம் முழங்க திருமாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி கோலாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















