காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்து, வெளியே அனுப்பிய ஒன்றிய குழு தலைவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவரான கருணாநிதி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விசிக கவுன்சிலர் தியாகராஜன் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை முன்வைத்துப் பேசினார்.
அப்போது அங்குச் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களை, ஒன்றிய குழுத் தலைவர் கருணாநிதி, அலுவலக உதவியாளர்கள்மூலம் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி கதவை மூடினார்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த வனத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், கதவைப் பலமுறை தட்டிப் பார்த்துத் திறக்கப்படாததால், கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
















