ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரியானா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, அம்மாநிலத்தில் பணியாற்றி வந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் அகமதை போலீசார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக 360 கிலோ வெடிபொருளை ஜம்மு-காஷ்மீருக்கு காவல் துறையினர் கொண்டு சென்று, அங்குள்ள நெளகாம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், வெடிபொருள்களின்மாதிரிகளைக் காவல் துறையினரும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வுபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத்செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை எடுக்கும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது தற்செயலான விபத்து என்றும் தெரிவித்தார்.
வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், நௌகாம் காவல் நிலையக் கட்டடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளர் பிரசாந்த் லோகண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நௌகாம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடி விபத்து தற்செயலானது எனவும், விபத்திற்கான காரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
















