திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி நீண்ட நேர தேடலுக்குப் பின் மீட்கப்பட்டது.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படையின் விமானப்படை தளத்தில் வீரர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், விமானப்படை தளத்தில் இருந்து சிறிய ரக பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தைச் சுபம் என்பவர் இயக்கிய நிலையில், திருப்போரூர் அருகே சென்றபோது விமானத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூர் – நெம்மேலி சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையின் பின்புறம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது விமானி பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். உப்பளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்ட நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தின் உதிரி பொருட்களையும் விமான படையினர் சேகரித்து வருகின்றனர்.
















