திருத்தணியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சித்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் மீது வடமாநில இளைஞர் கல்வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அப்போது, அங்குக் கூடியிருந்த மக்கள் வடமாநில இளைஞரை பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காப்பகத்தில் சேர்க்காமல் ஆந்திரா செல்லும் விரைவு ரயிலில் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், திருத்தணி வந்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் சென்ற வினோதினி என்பவர் மீதும் கல்வீசி தாக்கியுள்ளார்.
இதில், நெற்றியில் பலத்த காயமடைந்த வினோதினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி மக்கள் வடமாநில இளைஞரை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பகத்தில் சேர்க்காமல் போலீசார் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், இதனால், உயிர் பயத்தில் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















