குஜராத்துக்கு குடியேறிய பிரெஞ்சு பெண் ஒருவர், தனக்கு இந்தியாவில் மற்றொரு குடும்பம் உள்ளதை போல அண்டை வீட்டார் உணர வைக்கின்றனர் என இணையத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
பிரான்சை சேர்ந்த ஜூலியா சைக்னியூ என்ற பெண், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாத்தில் குடியேறினார்.
வெளிநாட்டில் வசித்த தனக்கு தனிமை தான் துணை என நினைத்த ஜூலியாவுக்கு, பேரின்பம் தரும் விதமாக அண்டை வீட்டாரின் நட்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது அண்டை வீட்டாரின் விருந்தோம்பல் இந்தியாவில் தனக்கு ஒரு குடும்பம் இருப்பது போன்ற உணர்வை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் அண்டை வீட்டாரின் பெயரைக் கூட அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஜூலியாவின் பதிவு, இணையத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் பெற்று வைரலாகியுள்ளது.
பலரும் இந்தியர்களின் மேலோங்கிய விருந்தோம்பல் பண்புகுறித்து இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
















