இந்தியாவில் தடை செய்யப்பட்ட THREEMA செயலியை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது என்ன THREEMA செயலி… விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
THREEMA செயலி… டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக மருத்துவர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட APP. ஸ்விட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட THREEMA செயலிக்கு இந்தியாவில் 2023-ம் ஆண்டிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் சதிவேலைக்காரர்களுக்கான அத்தனை அம்சங்களும் அதில் இடம்பெற்றிருப்பதே. மற்ற செயலிகளை போல், THREEMA செயலியில் தனிப்பட்ட விவரங்களை கொடுக்க வேண்டியதில்லை.
வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளில், ரெஜிஸ்ட்ரேசன் செய்ய வேண்டும் என்றால், மின்னஞ்சலோ, தொலைபேசி எண்ணோ அவசியம். ஆனால், THREEMA செயலியில் அதற்கான தேவையில்லை என்பதால், யார் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தை கண்டறிவது கடினம்.
THREEMA செயலியைப் பயன்படுத்துப்பவர்களுக்கு தனி ஐடி கொடுக்கப்படுவதால், அதை வைத்து தகவலை பரிமாறிக்கொள்ள முடியும் என தெரிகிறது. THREEMA செயலிலை பிளே ஸ்டோரில் இருந்தெல்லாம் பதிவிறக்கம் செய்து விட முடியாது. சுவிட்சர்லாந்தில் உள்ள THREEMA செயலியின் தலைமையத்திற்கு பிட்காயின் செலுத்தி, அதன் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
இதுவும் யார் யாரெல்லாம் பயன்பாட்டாளர்கள் என்பதை கண்டறிவதில் சிக்கிலை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாகவே மருத்துவர்கள் உமர் நபி, முஸம்மில் ஷகில், ஷானீன் சயீத் உள்ளிட்டோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்தியாவில் சதி வேலை நிகழ்த்த THREEMA செயலிக்கெனத் தனி சர்வர் அமைத்ததும் என்ஐஏ விசாரணையில் புலப்பட்டுள்ளது. பயங்கரவாத கும்பலை தவிர வேறு யாருக்கும், தகவல்கள் கசிந்து விடக் கூடாது என்பதற்காகப் பிரேத்யேக சர்வர் அமைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது, யார் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பயங்கரவாதிகள் இவ்வாறே பகிர்ந்துள்ளனர்.
இதனிடையே, THREEMA செயலியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுப்பது கடினம் என்பதால் என்ஐஏ அதிகாரிகளுக்குக் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் அயல்நாடுகளில் இருந்து யாரெல்லாம் தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் THREEMA செயலியை தான் பயன்படுத்தினார்கள் என்பது அவர்களது டெலிகிராம் சாட் மூலம் தெரியவந்துள்ளது.
THREEMA செயலி கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள், இதனைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பான தகவல் தொடர்புக்கு உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, இப்போது பயங்கரவாதிகளின் சாதனமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
















