சிவகங்கை அருகே வட்டாட்சியரை தெருநாய் கடித்த விவகாரத்தில் நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் தெருநாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், தெருநாய் கடியால் சிரமத்திற்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்ட வட்டாட்சியரை தெருநாய் கடித்துள்ளது.
இதில், காயமடைந்த வட்டாட்சியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அறிந்த ஆட்சியர் உடனடியாக நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், அவர் தொலைப்பேசியை எடுக்காததால், தெருநாய்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தங்களின் மீது துறைரீதியான நடவடிக்கை ஏன் எடுக்ககூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது கண்டுகொள்ளாத ஆட்சியர், அரசு அதிகாரி பாதிக்கப்பட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
















