தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்களில் சுருண்டது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 93 ரன்களில் சுருண்டது.
இதனால் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக டெஸ்ட்டில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது
















