பீகாரில் 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். இளம் வயதிலேயே அவர் எட்டிய சாதனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்…
பீகார் மாநிலத்தில் உள்ள மதுபனி மாவட்டத்தின் பெனிபட்டியை சேர்ந்தவர் மைதிலி தாக்கூர். இளம் வயதிலேயே மைதிலி தாக்கூருக்கு இருந்த இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது பெற்றோர், இசை பயிற்சிக்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.
துவாரகாவில் உள்ள பால் பவன் சர்வதேச பள்ளியில் கல்வியைத் தொடர்ந்த மைதில் தாக்கூர், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரியில் இசைப் பயிற்சியை முடித்தார்.
இதனைத்தொர்ந்து தனது சகோதரர்களுடன் சேர்ந்து போஜ்புரி நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்திவந்த மைதிலி தாக்கூருக்கு, செல்லும் இடமெல்லாம் பேரும் புகழும் சேர்ந்தது. மைதிலி தாக்கூரின் திறமைக்கு, சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகள் தேடி வந்தன.
இதனிடையே, சமூக சேவை மீதான ஈடுபாடு காரணமாக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட மைதிலி தாக்கூருக்கு, அலிநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மைதிலி தாக்கூர் மீதான திறமையின் மீது நம்பிக்கை வைத்து பாஜக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியது.
மிதிலா ஓவியத்தை பள்ளியில் கூடுதல் பாடத்திட்டமாக சேர்க்க நடவடிக்கை எடுப்பேன், அலிநகரை சீதாநகராக பெயர் மாற்றுவேன், பெண் குழந்தைகளின் கல்விக்கும் வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் பாடுபடுவேன் என மைதிலி தாக்கூர் அளித்த வாக்குறுதிகள் வாக்காளர்களை கவரவே, மிக குறைந்த வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகும் பெருமையை மைதிலி தாக்கூர் பெறுவார் என கருத்துகணிப்புகள் தெரிவித்தன. அதன்படியே ஆர்ஜேடி வேட்பாளரும், அரசியலில் மூத்த தலைவருமான பினோத் மிஸ்ராவை 11 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மைதிலி தாக்கூர் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் பீகாரில் 26 வயதில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற தவுசிப் அலம் மற்றும் 26 வயதில் எம்எல்ஏவாக தேர்வான தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் சாதனைகளை மைதிலி தாக்கூர் முறியடித்துள்ளார்.
இப்படி இளம்வயதில் எம்எல்ஏவாக தேர்வான மைதிலி தாக்கூர் குறித்து பலரும் இணையத்தில் தேடிபார்த்த போது, ஆச்சரியமான ஒரு காணொளி கிடைத்திருக்கிறது. 5 வருடங்களுக்கு முன், விஸ்வாசம் திரைப்படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடலை, மைதிலி தாக்கூர் மனமுருகி பாடியிருக்க, அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
(ப்ரீத்) https://www.facebook.com/TamilNEWJ/videos/watch-maithili-thakurs-kannaana-kanney-song/700310757355192/
இப்படி தனது மெல்லிய குரலால் இசை உலகில் பெயரெடுத்து அரசியல் வாழ்விலும் அடியெடுத்து வைத்திருக்கும் மைதிலி தாக்கூரின் புதிய பயணம் வெற்றிகரமாக அமைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
















