டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியான பயங்கரவாத டாக்டர் உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியான பிறகு, டெல்லி காவல்துறை வசமிருந்த இந்த வழக்கு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக NIA சோதனை மேற்கொண்டது .
இறுதியில் காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற பயங்கரவாதியை டெல்லியில் வைத்து NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார், அமீர் ரஷீத் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்துவதற்காக உமர் அகமதுடன் இணைந்து அமீர் ரஷீத் அலி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்கொலை படை தீவிரவாதியான உமர் அகமதுவின் மற்றொரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் NIA தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லி தாக்குலை நடத்திய தீவிரவாதி உமர் முகமது தங்கியிருந்த இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹரியானாவின் நுஹ் பகுதியில் வாடகை அறையில் அவன் 10 நாட்கள் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
















