இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்வதாக குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தணிக்கை திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நேர்மை, உண்மை மற்றும் வெளிப்படை தன்மையை நிலைநாட்டும் தூணாக இத்துறை விளங்குவதாக குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த பாரத இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில் பொது செலவீனங்களில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கவும், மக்களின் பணம் பொதுநலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், தணிக்கை துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கணக்கு தணிக்கை துறை தலைவர் ஆசிய அளவிலான தணிக்கை நிறுவனங்களின் அமைப்பிற்கு தலைமை வகிப்பது இந்தியா உலகளவிலான தலைவர்களை உருவாக்கி வருவதற்கு சான்றாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதனிடையே ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ‘ராமோஜி சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்று விருது வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுதலைவர் வெங்கையா நாயுடு, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
















