சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உம்ரா புனித யாத்திரை மேற்கொண்ட 42 இந்தியர்கள், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் மதினா அருகே பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக் கோர விபத்து ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், பேருந்தானது முற்றிலும் தீப்பற்றிக் கருகியது.
அப்போது பேருந்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த விபத்து தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.
மேலும் சவுதி அரேபியா விபத்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தெலங்கானா மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும் என்றும் ரேவந்த் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
















