பீகாரில் முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்திய அரசியல் சாசன முறைப்படி பதவியேற்பு நடைமுறைக்கு முன்பாகத் தற்போது பதவியில் உள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்படி இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ள பீகார் ஆளுநர், மறு அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும் வரை தற்போது பதவியில் உள்ளோர் பணியைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் மாநில பாஜக தலைவர்கள், நவம்பர் 20ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறவுள்ளது என்றும் அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
















