தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 173 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ள எடப்பாடி பழனிசாமியிடம் மக்களின் எண்ணங்கள் குறித்து கேட்டறிந்ததாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமியுடன் முழுக்க முழுக்க அரசியல் மட்டும் பேசியதாகக் கூறிய அவர், பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து பேசி வருவதாகத் தெரிவித்தார்.
பீகார் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால் குற்ற சம்பங்கள் அதிகரித்து வருகிறது என்றும், அதனைத் தடுக்க முடியாத அரசாகத் திமுக அரசு செயல்படுகிறது எனவும் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
















