துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் இந்தியா சார்பில், விமானப்படை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
போக்குவரத்து மற்றும் போர் விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, துபாய் விமான கண்காட்சி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான இரண்டு நாள் கண்காட்சி, தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 500 விமானம் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
150 நாடுகளில் இருந்து விமான தொழில் துறையை சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர்.
உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களான பம்பார்டியர், டசால்ட், எம்பிரேர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின், காலிடஸ் நிறுவனங்களும் கண்காட்சியில் தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்தியா சார்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், டி.ஆர்.டி.ஓ., கோரல் டெக்னாலஜீஸ், டேண்டல் ஹைட்ராலிக்ஸ், இமேஜ் சினர்ஜி எக்ஸ்புளோரர், எஸ்.எப்.ஓ., டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அதேபோல் இந்திய விமானப்படையின் போர் விமானங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சியில் விமானங்களின் சாகசங்களும் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
















