இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்யவுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது வரலாற்று சிறப்புமிக்க முதல் நடவடிக்கை எனக் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓராண்டுக்கு 22 லட்சம் டன் அளவுக்கு எல்பிஜி எரிவாயு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான எல்பிஜி இறக்குமதியில் 10 சதவீதம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த எரிபொருள் அமெரிக்காவின் வளைகுடா கடலோர பகுதியிலிருந்து பெறப்படும் என்றும், அமெரிக்க எல்பிஜிக்காக இந்தியச் சந்தையுடன் போடப்பட்ட முதல் கட்ட நீண்ட கால ஒப்பந்தம் இதுவென்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் முன்னணி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தம் இறுதி செய்ய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















