நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகத் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் நாகை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி நாகையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் அதிகபட்சமாக வேதராண்யத்தில் 16.3 சென்டிமீட்டர் மழையும், கோடியக்கரையில் 12.6 சென்டிமீட்டர் மழையும், திருக்குவளையில் 11.4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் 77.4 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
















