தென்மாநில விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளைக் கோவை வர உள்ள நிலையில் அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இதனைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளை கோவை வர உள்ள நிலையில் அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவிலிருந்து தனி விமானத்தில் வரும் பிரதமர் மோடி மாநாடு நடைபெறும் அரங்கிற்கு சாலை மார்க்கமாக வர உள்ளார்.
இதனை முன்னிட்டு நாளை பிற்பகல் 3 மணி வரை விமான நிலையம் முதல் அவினாசி சாலை இடையே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
கோவையின் நகர் பகுதி முழுவதும் மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன சோதனையிலும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
















