அண்மை காலமாக வெள்ளி நகைகள்மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. வெள்ளி நகை கடைகளும் அதிகளவில் திறக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஒரு சவரன் அதிகபட்சமாக 97 ஆயிரம் ரூபாயை கடந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.
தற்போது தங்கத்தின் விலை சிறிது குறைந்திருந்தாலும், உலகளவில் நிலவும் பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் பலரும் தற்போது வெள்ளி நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளி நகைகளுக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக, அது சார்ந்த கடைகளும் அதிகளவில் திறக்கப்பட்டு வருகின்றன.
தங்க நகைக்கடைகளை போலவே, வெள்ளி நகைக்கடைகளுக்கும் பிரபலங்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் திறப்பு விழா நடத்தி வருகின்றனர். வெள்ளியில் தங்க முலாம் பூசி, ஃபேன்சி கலெக்சன்களும், ட்ரடிஷனல் கலெக்சன்களும் உருவாக்கப்பட்டு வருவது வாடிக்கையாளர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.
தங்கம் மட்டுமல்ல அண்மை காலத்தில் வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, வெள்ளியும் முதலீட்டு பொருளாகப் பயன்படும் என்பதால், வெள்ளி நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக, பெண்கள் கூறுகின்றனர்.
மேலும் தங்கத்தில் இல்லாத டிசைன்கள்கூட வெள்ளி நகைகளில் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் வெள்ளி நகைகள் பிரபலமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக, தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் இடத்தை வெள்ளியால் பிடிக்க முடியாது என்றாலும், பட்ஜெட்டில் அடங்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் வெள்ளி நகைகளை நாடி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதிரடியான விலையேற்றம் தங்கத்தை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றியுள்ளது. தங்கத்தை வாங்க முடியாத மக்களுக்கு வெள்ளி ஒரு வரப் பிரசாதமாக உள்ளது. அதிகப்படியான விற்பனை காரணமாக, எதிர்காலத்தில் வெள்ளியும் தங்கத்தை போல ஜொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















