பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தி நடிகா் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதற்குத் தாமே காரணம் எனத் தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொலை செய்ய அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத்தொடா்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. இந்தக் குற்றங்கள் உள்பட மேலும் சில வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ஃப்ரெஸ்னோ நகரில்சட்டவிரோதமாகத் தங்கியிருந்தத அன்மோலை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அதனை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக்கிற்குமின்னஞ்சல்மூலம் தகவலை அனுப்பி உறுதிபடுத்தியுள்ளது.
















