கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே மின்உற்பத்தி நிலையத்தின் கால்வாயில் 2 நாட்களாகச் சிக்கி தவித்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மாண்டியாவின் மாளவள்ளி அடுத்த சிவனசமுத்திரம் அருகே உள்ள தனியார் மின்உற்பத்தி ஆலைக்குச் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த ஆண் காட்டுயானை வெளியே வரமுடியாமல் இரண்டு நாட்களாகத் தவித்து வந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் வந்த நிலையில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் யானை மீட்பது சவாலாக இருந்தது.
இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஹைட்ராலிக் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானையை அமைதிப்படுத்த மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர், ஹைட்ராலிக் கிரேன்களை கொண்டு யானையை பத்திரமாக மீட்டனர்.
2 நாட்களாக யானை தண்ணீரில் இருந்ததால் பூஞ்சை தொற்று மற்றும் தும்பிக்கை, கால்களில் புண்கள் ஏற்பட்டிருந்ததால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் பத்திரமாக விடப்பட்டது.
















