திருச்சி மாவட்டத்தில் கால்வாயைக் கடந்து செல்லப் பாதை அமைத்துத் தரப்படாததால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, வேங்கூர் பகுதியில் உள்ள நத்தக்கல என்ற இடத்தில் மட்டும் சுமார் 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெறப்படுகிறது.
இந்த கால்வாயை கடந்துதான், வேங்கூர் பகுதியில் இருந்து நத்தக்கல பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த சூழலில், மழைக்காலங்களில் இந்தக் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பதால், அதனை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மார்பளவு நீரில் இறங்கி செல்வது சாத்தியமில்லை என்பதால், விவசாய பணிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆரம்ப காலங்களில் இந்தக் கால்வாயில் சுத்தமான தண்ணீர் வெளியேறி வந்ததாகவும், தற்போது சாக்கடை கழிவுகளால் தண்ணீர் மாசடைந்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கால்வாய் வழியாக நடந்து செல்பவர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கால்வாயை விட்டால், 5 கிலோ மீட்டர் சுற்றிதான் மறுக்கரையை அடைய வேண்டிய சூழல் உள்ளது. இதனால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்யும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனனர். ஒவ்வொரு ஆண்டும் நிலத்தில் முதலீடு செய்ததை தாண்டி, கூலி ஆட்களுக்குப் பணம் கொடுக்கும் நிலை நீடித்து வருவதால், எவ்வித லாபமும் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருவரம்பூர் எம்எல்ஏவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், தேர்தல் நேரத்திலும், வெற்றிபெற்ற பிறகும் வேங்கூர் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த கால்வாயை கடந்து செல்ல பாதை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
சில சமயங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்தும் முறையிட்டனர். அதனை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார்.
கால்வாயை கடந்து செல்ல முடியாதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் கால்வாயைப் பாதுகாப்பான முறையில் கடக்க நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
















