வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகக் குளம்போலத் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்தப் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது.
இது நீண்ட நாட்களாகத் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் உண்டாகும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















