உலக வங்கி நிதியில் உருவாக்கப்பட்ட நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டத்தை, 3 ஆயிரத்து 838 கோடி ரூபாயில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், உலக வங்கியிடம் பெறப்பட்ட 2 ஆயிரத்து 490 கோடி ரூபாயில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை சேவைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் என 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொறியாளர்களுக்கான கையேடு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உலக வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில், கையேடு தயாரிக்க கலந்தாலோசகர் தேர்வு செய்ய, சில மாதங்களுக்கு முன், டெண்டர் வெளியிடப்பட்டது.
ஆனால் தகுதியான நிறுவனங்கள் எதுவும் இதில் பங்கேற்க முன்வராததால், மீண்டும் மீண்டும் கலந்தாலோசகர் தேடலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கையேடு தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















