சேலத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழாவில் தன்னை ஏன் அழைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகளுடன் பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 14வது சர்வதேச அளவிலான உலககோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான அறிமுக விழா சேலம் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஜூனியர் உலக கோப்பைக்கான கோப்பையைச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் அறிமுப்படுத்தினர்.
இந்நிலையில், விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை எனக்கூறி மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், அரசு விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
















