டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கியை தொடர்ந்து சிரியாவும் சம்பந்தப்பட்டிருப்பதால், என்ஐஏ விசாரணை வளையம் விரிந்திருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்தியாவுக்கு எதிரான சதிவேலையில் பாகிஸ்தான், துருக்கியை தொடர்ந்து, சிரியாவும் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மருத்துவர்கள் முஸம்மில் ஷகீல், ஷாகீன் சயீத், அடில் அகமது ரத்தார், முஃப்தி இர்பான் அகமது ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்து வரும் நிலையில், அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
துருக்கியில் மருத்துவர்கள் உமர் நபி, முஸம்மில் ஷகீல், முஸாப்பர் ரத்தார் ஆகியோர் பாகிஸ்தான் பயங்கரவாதியை மட்டுமே சந்தித்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சிரியாவை சேர்ந்த பயங்கரவாதிகளுடனும் அவர்கள் சந்திப்பு நடத்தியது தெரிய வந்திருக்கிறது. இதுமட்டுமல்ல பாகிஸ்தான் பயங்கரவாதியான உகாசாவின் தூண்டுதலில் மட்டுமே டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததாக அறியப்பட்ட நிலையில், மேலும் இருவர் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது உறுதியாகியுள்ளது.
அதாவது, மருத்துவர்கள் உமர், முஸம்மில், அடில் அகமது ஆகிய மூவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளான பைஷல், ஹசிம், முகாசா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலி மூலம், மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்பது உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2022-ம் ஆண்டில் துருக்கி சென்ற போது, மருத்துவர் உமர் நபி மட்டுமே நாடு திருப்பியுள்ளார் என்றும், மற்றொரு மருத்துவரான முசாப்பர் ரத்தார், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று, அல்-கொய்தா அமைப்பில் சேர்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடத்தி உயிரிழந்த மருத்துவர் உமர் நபியும், ஆப்கானிஸ்தான் செல்ல விரும்பியதாகவும், ஆனால் இந்தியாவுக்கு சென்று ஜெய்ஷ-இ-முகமது பெயரில் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதி முகாசா அவரை மூளை சலவை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜம்மு – காஷ்மீரின் பாம்போர் பகுதியை சேர்ந்த அமிர் என்பவரை கைது செய்துள்ள அதிகாரிகள், டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை புதிதாக வாங்கி உமரிடம் வழங்கியதை உறுதிப்படுத்தியுள்ளனர். ட்ரோன்களை ஏவுகணைகளாக மாற்றும் தொழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கு பயிற்றுவித்ததாக ஜம்முகாஷ்மீரை சேர்ந்த மற்றொரு நபரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இப்படியாக, டெல்லி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் தொடங்கி பாகிஸ்தான், துருக்கி, சிரியா என்று நீண்டு கொண்டே செல்வதால், இந்தியாவுக்கு எதிராக இன்னும் என்னென்ன சதிவேலைகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய அதிகாரிகள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
















