துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. .
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கண்காட்சியின் இறுதி நாளில்
சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்தது. துபாய் நேரப்படி, மதியம் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை உறுதி செய்த இந்திய விமானப்படை, விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விமானியின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கும் என பதிவிட்டுள்ளது.
மேலும், விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேஜஸ் விமானம் இரண்டாவது முறையாக விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பயிற்சிக்காகப் புறப்பட்ட தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானி பாராட்சூட் மூலமாக உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
















