டெல்லி மெட்ரோ பார்க்கிங்கில் கார் நிறுத்தக் கட்டணம் வசூலித்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டவர் வசமாகச் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி ஜனக்புரியில் உள்ள கிழக்கு மெட்ரோ நிலையத்துக்குச் சென்ற வாகனஓட்டி ஒருவர், அங்குள்ள பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், காரை நிறுத்தப் பார்க்கிங் கட்டணம் செலுத்தும்படி கூறி கியூ ஆர் கோடை காண்பித்துள்ளார். அவரது செயலைக் கண்டு சந்தேகமடைந்த வாகனஓட்டி, கியூ ஆர் கோடின் வங்கி வாடிக்கையாளர் பெயரை பரிசோதித்துள்ளார்.
அப்போது அந்த வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாகனஓட்டி கட்டணம் செலுத்த மறுக்கவே, கியூ ஆர் கோடுடன் வந்த மோசடியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வாகன ஓட்டி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மோசடியாளர் வைத்திருந்த கியூ ஆர் கோட் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், மோசடியாளரை விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ வைரலான நிலையில், நாளுக்கு நாள் ஏமாற்றுப் பேர் வழிகள் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
















