நாடு முழுவதும் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது சுதந்திரத்துக்குப் பிறகு கொண்டுவரப் பட்ட மிக விரிவான மற்றும் முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொண்டுவந்த தொழிலாளர் சட்டங்கள், இந்தியாவின் உற்பத்தித் துறைக்குப் பெரும் சுமையாக இருந்து வந்தது. அந்தச் சட்டங்கள் நாட்டின் கிட்டத்தட்ட 3,58,664 லட்சம் கோடி ரூபாய் இந்திய பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே பங்களிக்கிறது. எனவே, தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலாளர் சட்டங்களைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் சட்டம் 2020 ஆகியவை இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன. இந்தியாவில் உள்ள பல தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், முந்தைய 29 சட்டங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களும் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய சட்டங்களில், அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எழுத்துப்பூர்வ சான்று, வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்படுகிறது. முன்பு குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இருந்த வந்த குறைந்தபட்ச ஊதியம் இப்போது அனைத்து தொழிலாளர்களும் கட்டயாமாக்கப் பட்டுள்ளது. சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவும் சரியான நேரத்தில் ஊதியமும், நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கிறது.
இந்தச் சட்டம் அமைப்பு சாரா மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை கட்டாயமாக்கி உள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESI, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச உடல்நலப் பரிசோதனை உறுதி செய்வதும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயப் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
ஆபத்தான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் சுகாதாரப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்மதத்துடன் சுரங்கத் தொழில்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இரவுப் பணி செய்யவும் இந்தப் புதிய சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமஊதியம் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. ஒரு வருட வேலைக்குப் பிறகு நிலையான ஊழியர்களுக்குப் பணிக்கொடைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
வணிகங்களுக்கு, குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஒரே பதிவு, ஒரே உரிமம் மற்றும் ஒரே ரிட்டர்ன் என்ற செயல்முறை கொண்டுவரப்பட்டு வணிகம் செய்யும் சுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் தொழிலாளர் நலனுக்காகப் பிரதமர் மோடி எடுத்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய நடவடிக்கையாகும்.
இது நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் நியாயமான கண்ணியத்தை வழங்கும் சீர்திருத்தம் ஆகும். இந்தப் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஒரு சுயசார்பு இந்தியாவை நோக்கிய வெற்றி பயணத்தில் முக்கிய மைல் கல்லாகும். இது 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.
















