சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பேருந்துகளை வாங்கிவிட்டு, எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….
ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் பொது போக்குவரத்துக்கான மின்சார பேருந்துகள், பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கின்றன. அதிலும் நார்வே, டென்மார்க் ஆகிய இரு நாடுகளிலும், சீன நிறுவனமான Yutong-ன் மின்சாரப் பேருந்துகளே பார்க்கும் இடங்களில் எல்லாம் ஓடிக்கொண்டு இருக்கும்.
தற்போது இதில் என்ன பிரச்னை எழுந்திருக்கிறது என்றால், Yutong மின்சாரப் பேருந்துகளில் ஆட்டோமேடிக் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படும் வசதி இடம்பெற்றிருப்பது தான். இந்த தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை .
ஒருவேளை நாசவேலைகளுக்கு பயன்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற கவலைதான் நார்வே, டென்மார்க் நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாஃப்ட்வேர் அப்டேட் என்ற பெயரில் Yutong நிறுவனமே பேருந்துகளை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டால் என்ன செய்வது என்றெல்லாம் இருநாடு அரசுகளும் அச்சப்பட தொடங்கியுள்ளன.
நிச்சயம் இது பாதுகாப்பு குறைபாடாகத் தான் இருக்கும் என போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
சீன உற்பத்தி மின்சாரப் பேருந்துகளில் உள்ள குளறுபடியை நார்வே போக்குவரத்து கழகமான RUTER தான் முதன் முதலில் கண்டறிந்தது. Yutong நிறுவனத்தின் மின்சாரப் பேருந்துகளையும், உள்நாட்டு நிறுவனமான VDL-ன் மின்சாரப் பேருந்துகளையும் சோதித்து பார்த்த போது இந்த உண்மை புலப்பட்டுள்ளது.
Yutong நிறுவனத்தின் தரப்பிலோ இந்த விவகாரத்தில் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. டிஜிட்டல் ரீதியாக சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதே சாலச்சிறந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படுதற்கு முன்னரே, விபத்துகளை தடுக்க இது உதவும் என தங்கள் தரப்பை நியாயப்படுத்தி இருக்கிறது Yutong நிறுவனம்.
இந்த விவகாரம் நார்வே, டென்மார்க் நாடுகளில் மட்டுமல்ல, ஜரோப்பா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
மின்சார பேருந்துகளை போல, பல நாடுகளும் சீன உற்பத்தி பொருட்களை வாங்கியிருக்கும் நிலையில், அவற்றிலும் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு இருக்குமோ என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைக்கு சீனா எப்படி முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
















