விஞ்ஞானிகளின் கண்காணிப்பையும் தாண்டிச் சூர்ய புயல் ஒன்று அண்மையில் பூமியை தாக்கியுள்ளது. இது எப்படி சாத்தியமானது?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பூமி மற்றும் பூமியில் உள்ள உயிரினங்களின் இயக்கத்திற்கு சூரிய ஆற்றல்தான் பிரதானமாக உள்ளது. அதேநேரத்தில் சூரியனில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுகள் பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, சூரியனில் இருந்து வெளியாகும் புயல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. குறிப்பாக, செயற்கை கோள்களும், விண்வெளி வீரர்களும் இத்தகைய சூரிய புயல்களால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம் சூரிய புயல்களை பெருமளவு தடுப்பதால், மனிதர்களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருந்தபோதும், செயற்கைக்கோள்களை அவை பாதித்தால், தகவல்தொடர்பு சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
கடந்த காலங்களில் சூரிய புயல்கள் பூமியை பலமுறை தாக்கியுள்ளன. குறிப்பாக, 2006ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி X9 என்ற சூரிய புயல் ஏற்பட்டது. அப்போது விமானங்களில் பயணித்துக்கொண்டிருந்த மக்கள் அதிகப்படியான கதிர்வீச்சை எதிர்கொண்டனர். வழக்கத்தைவிட 20 சதவீதம் வரை அவர்கள் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
1859ம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயலால், கார்ரிங்டன் என்ற தந்தி சிஸ்டம் முற்றிலும் அழிந்த நிலையில், 1972ம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயல் வியட்நாம் கடற்கரைகளில் இருந்த சுரங்கங்களை வெடித்து சிதற வைத்தது. இப்படி, பெரும் பாதிப்புகளைச் சூர்ய புயல்கள் ஏற்படுத்துவதால், அதனை விஞ்ஞானிகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்கலன்களை அனுப்பி சூரியனை ஆய்வு செய்தும் வருகின்றன.
ஆனால், இந்தக் கண்காணிப்புகளை எல்லாம் தாண்டி, சத்தமே இல்லாமல் சூரிய புயல் ஒன்று அண்மையில் பூமியை தாக்கியுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ம் தேதி இந்தச் சூர்ய புயல் பூமியை தாக்கியதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி முன்னரே கணிக்க முடியாத வகையில் தாக்கும் சூரிய புயல்கள், ஸ்டெல்த் வகை சூரிய புயல்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
தற்போது பூமியை தாக்கிய சூரிய புயல் குறைந்த கதிர்வீச்சுகளை கொண்டிருந்ததால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும், துருவப் பகுதிகளில் மட்டும் அரோராக்களின் அடர்த்தி அதிகரித்து காணப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் மெதுவாகவும், அமைதியாகவும் ஏற்பட்டதால் அதனை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நாசா விஞ்ஞானிகள், சூரிய காற்றின் வேகம் சற்று அதிகரித்திருந்தது குறித்து ஆய்வு செய்தபோது புயல் தாக்குதல் குறித்து தெரிய வந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறிய அளவிலான சூரிய புயலையும் முன்னரே கண்டறியும் தொழில்நுட்பம்குறித்த ஆய்வு வேகமெடுத்துள்ளது.
















