ரஷ்யா உடனான போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்பின் ஆதரவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு பற்றி விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடினர். இந்தச் சூழலில், உக்ரைனின் தலைமை அமெரிக்க ஆதரவைப் பாராட்டத் தவறிவிட்டதாக அதிபர் டிரம்ப் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாகச் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு வன்முறை மற்றும் பயங்கரமானது என்றும், அப்போதைய அமெரிக்க தலைமை மற்றும் உக்ரைன் தலைமை சரியாக இருந்திருந்தால் போர் நடந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் நிர்வாகத்தின்போது இந்தப் போர் தொடங்கியது என்றும், பின்னர் மோசமாகவிட்டது எனவும் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன்-ரஷ்யா போர் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தோல்வி எனக்கூறியுள்ள அதிபர் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு உக்ரைன் தலைமை எந்தப் பாராட்டும் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில்,
அமெரிக்காவின் தலைமை முக்கியமானது என்றும், உக்ரைன் பாதுகாப்புக்காக அமெரிக்காவும் அதிபர் டிரம்பும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
அமைதியை நோக்கிய ஒவ்வொரு அடியிலும் மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மீண்டும் போர் நிகழாமல் இருக்க எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்குக் கட்டுப்டுவோம் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
















