மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் கோபோரண்டா கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மூத்த மகன் விவேக் சக்ரவர்த்தி 1988 ஆம் ஆண்டு குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றார்.
விவேக்கை குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்காததால் 37 ஆண்டுகளாகக் குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் எஸ்ஐஆர் செயல்முறைகள் மூலம் விவேக் சக்ரவர்த்தி குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
சக்ரவர்த்தியின் இளைய மகன் பிரதீப் சக்ரவர்த்தி, புருலியாவில் பிஎல்ஓ-வாக பணிபுரிகிறார். எஸ்ஐஆர் படிவத்தில் அவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொல்கத்தாவில் வசித்துவந்த விவேக், சொந்த ஊரின் பூத் அதிகாரியான பிரதீப்பின் எண்ணை இணையத்தில் இருந்து எடுத்து, அவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது படிவத்தில் உள்ள குடும்ப வரலாற்றைப் பூர்த்தி செய்யும்போது தொலைந்துபோன தனது சகோதரர்தான் விவேக் என்பதை பிரதீப் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து பெற்றோரை விவேக்குடன் பிரதீப் பேசவைத்துள்ளார். எஸ்ஐஆர் செயல்முறைகள் மூலம் விவேக் சக்ரவர்த்தி குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















