இத்தாலியில் மலையடிவார பகுதியில் வசித்து வந்த பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சாமானியர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இத்தாலியில் உள்ள அப்ருஷோ மலையடிவார பகுதியில் பிரிட்டனை சேர்ந்த நாதன் ட்ராவலியான் – ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்தரின் பர்மங்காம் தம்பதி, மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். தங்கள் குழந்தைகள் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து வளர வேண்டும் என்பது நாதன் – கேத்தரின் தம்பதியின் ஆசை. இதற்காக, தாங்கள் வசிக்கும் வீட்டை, நகர்ப்புறங்களில் உள்ளது போல் இல்லாமல், வனப்பகுதிக்கு ஏற்றார் போல் கட்டியிருந்தனர்.
வீட்டிற்குள் ATTACHED BATHROOM என்பதே இருக்காது. வெளியே கட்டியுள்ள கழிவறையை தான் பயன்படுத்த வேண்டும். வீட்டின் அருகே வெட்டப்பட்டுள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து தான், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சூரிய மின்சக்தி பயன்பாடு, விறகுகளை எரித்துக் குளிர் காய்வது என அத்தனையிலும் இயற்கையை சார்தே வாழ்ந்து வந்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தாங்களே ஆசிரியராக மாறி நாதன் – கேத்தரின் தம்பதி பாடங்களை கற்பித்து வந்தனர் . அந்த அளவுக்குச் சமூகத்திடம் இருந்து அவர்கள் விலகியிருந்தனர்.
கல்வி விஷயத்தில் விமர்சனங்கள் இருந்தாலும், இயற்கையான சூழலில் வாழும் நாதன் – கேத்தரின் குடும்பத்தின் வாழ்வியல் முறை இணையத்தில், பல பாராட்டுகளை பெற்றன. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை… குழந்தைகளை பிரிந்து வாழும் கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் நாதன் – கேத்தரின் தம்பதி. விஷக்காளானை சாப்பிட்டதன் விளைவு இன்று அந்தக் குடும்பமே பிரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு வீட்டை ஒட்டிய வனப்பகுதியில் முளைத்திருந்த விஷக்காளானை சாப்பிட்டு, ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக அடிக்கடி வீட்டிற்கு சென்று அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நாதன் – கேத்தரின் தம்பதி செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து, புரிதல் இல்லாத பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறையின் வாதம் வெற்றி பெற்றது. இதனால், நாதன் – கேத்தரின் தம்பதியிடம் இருந்த பிரிக்கப்பட்ட குழந்தைகள், வாஸ்டோ நகரில் உள்ள பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். தாய் கேத்தரினும் கூடவே அழைத்து செல்லப்பட்ட போதும், குழந்தைகளை சந்திக்க அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதாம். இதனால், தங்களின் உரிமை முற்றிலும் மறுக்கப்படுவதாக நாதன் – கேத்தரின் தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட சம்பவத்தில் இத்தாலி மக்களுக்கே உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை. தங்கள் நாட்டை நம்பி வந்து, அமைதியான முறையில் வாழ்பவர்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல எனப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மெலோனிக்கும் நீதிமன்ற உத்தரவில் உடன்பாடு இல்லாததால், அங்கு அதிகார மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஒருபுறம் ஆதவுக்குரல் எழுந்தாலும், நாதன் – கேத்தரின் தம்பதியினரின் பிடிவாதம், அவர்கள் குடும்ப நலனுக்கு நல்லதல்ல என்ற எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றிருக்கும் நிலையில், குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
















