வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பருவமழை விட்டுவிட்டு பெய்து வருவதால், மழைக்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சளி, இருமல், தலைவலி, தொண்டை வலி, உடல் சோர்வு போன்றவை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறி எனக் கூறியுள்ளனர்.
இன்ஃப்ளூயன்ஸா என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு தொற்று நோய் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடிய காய்ச்சல் எனவும் கூறியுள்ளனர்.
சென்னையில் வைரஸ் காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் காய்ச்சல் 10 நாட்களில் சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைரஸ் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















